Published : 15 Feb 2022 09:37 AM
Last Updated : 15 Feb 2022 09:37 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விசாரணை ஆணையத்தில் கிரிஜா வைத்தியநாதன் சாட்சியம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆணையத்தின் முன்பு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே 35 கட்டங்களாக விசாரணை நிறைவுற்றுள்ள நிலையில், 36-வதுகட்ட விசாரணை தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து சட்டம் ஒழுங்கு முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் டிஜிபி இன்று ஆஜர்

இன்று (பிப்.15) தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார். வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி, முன்னாள் பொதுத்துறைச் செயலர் செந்தில்குமார், சிபிஐ டிஎஸ்பி ரவி உள்ளிட்ட 7 பேர் ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x