

கோவையில் பாஜக வெற்றி பெற்றால் தொடர் குண்டு வெடிப்பு நினைவாக சின்னம் அமைக்கப் படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, கோவையின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கோவை மாவட்ட பாஜக தலைவர் ஆர்.நந்தகுமார் தலைமை வகித்தார். மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்தமிழக அமைப்பு செயலாளர் சேதுராமன், தமிழக பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
கோவை மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தலில் புதிய வகை பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து கரூர் பாணியில் வாக்கு சேகரிக்கிறது திமுக. தமிழகத்தில் இந்து கோயில்களை இடிக்கும் நிலை தொடர்கிறது. இரவில் நோட்டீஸ் அளித்து கோயில்களை இடிக்கும் சூழல் உள்ளது. இந்த அரசு அனைத்து மதத்துக்குமான அரசு இல்லை.
கோவையை அமைதிப் பூங்காவாக்க பாஜக வேட்பாளர் களை மக்கள் வெற்றி பெற வைக்கவேண்டும். ராணுவ வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட கோவையில்தான் தேசப்பற்றும் அதிகம் உள்ளது. கோவை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் வெல்லும் போது, மேயராகும்போது குண்டு வெடிப்பு நினைவாக சின்னம் அமைக்கப்படும். அதுவே பாஜகவின் முதல் பணி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரூரில் அஞ்சலி
தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பேரூர் நொய்யல் படித்துறையில் நேற்று நடைபெற்றது. இதில், இறந்து போனவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறி திதி கொடுக்கப்பட்டது. மேலும் சிலர் மொட்டை அடித்து துக்கம் அனுசரித்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயல் தலைவர் சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.