

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, சந்திராபுரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி பேசியதாவது: கடந்த தேர்தலில் நம்மிடம் இருந்த சுணக்கத்தால் திமுக வெற்றிபெற்றது. 1 லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் இழந்ததால், 45 தொகுதிகளை நாம் இழந்துவிட்டோம். 9 மாதங்களில் எந்த திட்டத்தையும், இந்த ஆட்சியால் போடமுடியவில்லை. இதனை மக்களுக்கு புரிய வைத்தாலே நாம் வெற்றி பெற்றுவிடலாம். பல பாலங்கள், கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக. அதனை திமுகவினர் திறந்து வைக்கின்றனர். திமுகவுக்கு இனி தேய்பிறைதான். மாநகராட்சியில் உள்ள எம்.எல்.ஏ.வைவிட, மேயருக்குத்தான் அதிகாரம் அதிகம். அப்பதவியை நாம் வென்றெடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்கலாம் என்று நான் சவால்விட்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.