Published : 15 Feb 2022 07:41 AM
Last Updated : 15 Feb 2022 07:41 AM
சென்னை: டிஜிட்டல் கல்வி முறை எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டுமானால் கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய வசதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று சென்னையில் நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐடிடிடிஆர்) விளையாட்டு மைய கட்டிடத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று திறந்துவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
கற்பவர்களாக, அறிவை வளர்ப்பவர்களாக இருக்கும் ஆசிரியர்களே நமக்கு தேவை. சிறந்த ஆசிரியர்கள் புதிய கல்விச் சூழலை உருவாக்குவதுடன் நாட்டின் முன்னேற்றத்துக்கும் அடித்தளமிடுகின்றனர். ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ என்பது தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆவணம். இது எதிர்காலத்துக்கான செயல்திட்டத்தை கொண்டுள்ளது. நாட்டின் கல்விச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த அது வகை செய்கிறது. கல்வித் திறன்களுடன் புதிய கண்டுபிடிப்பையும் அது வலியுறுத்துகிறது.
கரோனா தொற்று உலக அளவில் கல்வியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கி, யுனெஸ்கோ, யுனிசெஃப் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தற்போதைய மதிப்பில் இந்த தலைமுறை மாணவர்கள் வாழ்நாள் வருவாயில் 17 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு அல்லது உலகளாவிய தற்போதைய ஜிடிபியின் 14 சதவீத இழப்பு என்ற ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஏழை, கிராமப்புற, மாற்றுத் திறன் குழந்தைகள், சிறுபான்மையினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
டிஜிட்டல் முறையில் கற்றலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் நிலையில், அனைவருக்கும் பாகுபாடின்றி டிஜிட்டல் சேவை கிடைப்பதை உறுதி செய்வது முக்கியம். இந்த இலக்கை அடைய, கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகளிலும் இணைய வசதியை அதிகரிக்க வேண்டும்.
இ-லேர்னிங் எனப்படும் மின்னணு கற்றலில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதும் அவசியம். இதில், உள்ளூர் மற்றும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளும் விதமாக ஆசிரியர்களை தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களாக மேம்படுத்த என்ஐடிடிடிஆர் போன்ற அமைப்புகள் பங்காற்ற வேண்டும்.
கரோனாவால் கற்றல் - கற்பித்தலில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் மற்றும் நேரடி கற்பித்தல் என்ற கலப்பு முறையை கல்வி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இந்த சூழலில், கல்வி எளிதில் கிடைப்பது, அதன் பங்களிப்பு மற்றும் தரத்தை உறுதிசெய்ய, ஆன்லைன் கல்வி முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி வரையிலாவது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்ஐடிடிடிஆர் தலைவர் விஎஸ்எஸ் குமார், இயக்குநர் உஷா நடேசன், அசன் மவுலானா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT