Published : 15 Feb 2022 07:58 AM
Last Updated : 15 Feb 2022 07:58 AM

வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 80 வகையான பொருட்கள் தயார்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் வாக்குப்பதிவுக்கு தேவையான 80 வகையான பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்களில் ஆண், பெண் வாக்காளர்களுக்காக தலா 255 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களுக்காக 5,284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,794 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இவை அனைத்தும் 1,368 அமைவிடங்களில் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க மொத்தம் 1,368 சக்கர நாற்காலிகள் தயார்நிலையில் உள்ளன. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சாய்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப உடல் வெப்பநிலை மானி, கைகழுவும் திரவம் 100 மி.லி. மற்றும் 500 மி.லி. முகத்தடுப்பான், மூன்றடுக்கு முகக்கவசங்கள், ஒரு முறை உபயோகப்படுத்தும் கையுறைகள், முழு கவச உடைகள் உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்கள் மண்டலங்களுக்கு உட்பட்ட விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், வாக்குப்பதிவுக்கு தேவையான சட்டமுறை சார்ந்த படிவங்கள், சட்டமுறை சாரா படிவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, அழியாத மை குப்பிகள் உள்ளிட்ட வாக்குப்பதிவு பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் படிவங்களுக்கான உறைகள் போன்ற 80 வகையான பொருட்கள் 19-ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்காக அனுப்பி வைக்க விநியோக மையங்களில் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி டி.ஜி.வைஷ்ணவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள விநியோக மையத்திலிருந்து அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்ப உள்ள வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரோனா தொற்று தடுப்பு பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிவறை, சாய்தள வசதிகள் உள்ளனவா என்றும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x