

சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையை கண்டித்து, அந்நிறுவன ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கான நிறுவன தகவல் அறிக்கையை இந்திய பங்குச் சந்தை பத்திர மாற்று ஆணையத்தில் (செபி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய காப்பீட்டுக் களப் பணியாளர் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்ஐசி ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம், சென்னை அண்ணா சாலை எல்ஐசி மண்டல அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதில் கூட்டுப் போராட்டக் குழு தலைவர்கள் எஸ்.ரமேஷ்குமார் கே.சுவாமிநாதன், சுரேஷ், விஜயகுமார் பேசினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சுரேஷ் குமார் கூறியதாவது: செபியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிறுவன தகவல் அறிக்கையில் 5 சதவீத பங்குகளை, பங்கு விற்பனைக்கு கொண்டுவரப் போவதாக எல்ஐசி அறிவித்துள்ளது. ஏற்கெனவே, இதற்காக எல்ஐசியின் மூலதன தளம் ரூ.6,300 கோடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் 5 சதவீதம் அதாவது, ரூ.310 கோடி பெறுமான பங்குகள் விற்பனைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.5,39,686 கோடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு மூன்று நான்கு மடங்குகள் இருக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பங்கு விற்பனையாக இது இருக்கும் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்ஐசி நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றின் முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 2 முறை எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை பற்றி விவாதிக்கப்பட்டு அது கைவிடப்பட்டுள்ளது. இப்போதும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் முடிவை எதிர்த்து மக்களின் கருத்து திரட்டப்படும். அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகளையும் விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.