Published : 15 Feb 2022 10:23 AM
Last Updated : 15 Feb 2022 10:23 AM

புதுச்சேரியில் குவிந்த காதல் ஜோடிகள்; ஒருபுறம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து: மறுபுறம் போலீஸார் கெடுபிடி

காதலர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் முகக்கவசம் அணியாமல் சென்ற இருவரை பிடித்து. அபாராதம் விதிக்கும் காவல்துறையினர். அடுத்த படம்: தன் தலையில் இதய வடிவில் முடி வெட்டி காதலர் தினத்தன்று வலம் வந்த வில்லியனூரைச் சேர்ந்த ராஜா. கடைசி படம்: பாரதி பூங்காவில் காதலர்களுக்கு பூக்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கெடுபிடி காட்டிய போலீஸாரும். படங்கள்: படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

காதலர் தினத்தையொட்டி புதுச்சேரியில் காதலர்கள் குவிந்தனர். காதல் ஜோடிகளுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க, பூங்காவுக்கு வந்த போலீஸார் காதலர்களிடம் ஊர் பெயர் உள்ளிட்ட விவரங்களை விசாரித்து கெடுபிடி காட்டினர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கொண்டா டப்பட்டது.

புதுவையில் வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதலே வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதில், இம்முறை காதல் ஜோடிகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தனர்.

காதலர் தினத்தையொட்டி நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் காதல் ஜோடிகளின் நடமாட்டம் அதிகம் இருந்தது. கடற்கரைச் சாலைக்கு வந்த வெளிமாநில காதல் ஜோடிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணியவில்லை. அவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். கடற்கரை சாலை, பாரதி பூங்காவில் கையில் பூக்கள், சாக்லெட்டுடன் காதலர்கள் வலம் வந்தனர்.

‘ஜாதி, மத ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கும் வாய்ப்பாக உள்ள காதலை போற்றுவோம்’ என்று கூறி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பாரதி பூங்கா மற்றும் கடற்கரைக்கு வந்த காதலர்களுக்கு பூக்கள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மாநிலத் தலைவர் வீரமோகன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ், பொருளாளர் பெருமாள், இளைஞரணி தலைவர் சிவமுருகன், தொழிற்சங்க தலைவர் ஜெகன், மகளிரணி தலைவர் சுகந்தி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டு காதலர்களுக்கு பூக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதே நேரத்தில் பாரதி பூங்காவில் இருந்த காதலர்களை போலீஸார் விசாரித்தனர். அப்பகுதியில் போலீஸார் அதிகளவு கெடுபிடி காட்டினர். அங்கு வந்த சமூக கூட்டமைப்பினர், "வழக்கமான நாட்களில் ஏதும் விசாரிக்காமல் காதலர் தினத்தில் மட்டும் கெடுபிடி காட்டுவது சரியா?” என்று போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.

அதே நேரத்தில், தாவரவியல் பூங்காவில் டிக்கெட் பெற்று சென்ற காதல் ஜோடிகளுக்கு கெடுபிடி இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x