

காவல் துறையின் தடையை மீறி தமிழக - கர்நாடக எல்லையில் மே 3-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: காவிரியின் குறுக்கே ராசி மணல், மேகேதாட்டு ஆகிய இடங்களில் அணைகளைக் கட்ட விவசாயிகளைத் தூண்டிவிட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி கர்நாடக அரசு பூமிபூஜை நடத்தியுள்ளது.
இதைக் கண்டித்து தமிழக - கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடியில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தோம். உண்ணாவிரதத்துக்கு அனு மதி வழங்குமாறு அந்த மாவட்ட காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், போலீஸார் அனுமதி தர மறுத்து தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநில நீர்ப் பாசனத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘‘ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராசிமணல், மேகேதாட்டு அணை கட்டுமானப் பணி மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசின் அனுமதி பெற்று, அணை கட்டுமானப் பணி தொடங்க உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், கர்நாடக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாகவும் வரும் மே 3-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூஜூவாடியில், தடையை மீறி விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.