Last Updated : 12 Apr, 2016 04:18 PM

 

Published : 12 Apr 2016 04:18 PM
Last Updated : 12 Apr 2016 04:18 PM

ஒட்டப்பிடாரத்தில் மீண்டும் கிருஷ்ணசாமி?- 5-வது முறையாக களமிறங்குகிறார்

ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பி டாரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையை சேர்ந்தவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஒட்டப்பிடாரம். இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி ஏற்கெனவே 4 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு வந்ததற்கான பின்னணியில் மிகப்பெரிய வரலாறு உள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கொடியங்குளத்தில் ஜாதி கலவரம் வெடித்தது. தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைக்கு எதிராக டாக்டர் கிருஷ் ணசாமி குரல் கொடுத்தார். மேலும், ஒட்டப்பிடாரம் வந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். இதன் மூலம் இந்த தொகுதி மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றார்.

1996-ல் வெற்றி

1996-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் முதல் முறையாக கிருஷ்ணசாமி களம் இறங்கினார். அப்போது ஜனதா கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,148 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் முறையாக தமிழக சட்டப் பேரவைக்கு சென்றார்.

தொடர்ந்து 1997-ம் ஆண்டு புதிய தமிழகம் கட்சியை தொடங்கி, அதன் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார். 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி 2-வது முறையாக களமிறங்கினார். ஆனால் இந்த முறை வெறும் 651 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அவர் இழந்தார்.

மாயாவதி பிரச்சாரம்

பின்னர் 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒட்டப்பிடாரம் வந்து பிரச்சாரம் செய்தார்.

இருப்பினும் இம்முறையும் கிருஷ்ணசாமிக்கு தோல்வியே கிடைத்தது. 9,444 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ப.மோகனிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெற்றது. மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, 25,147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

அதன்பின்னர் அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணசாமி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

5-வது முறை

தற்போது 2016 தேர்தலில் புதிய தமிழகம் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் 5-வது முறையாக அவர் களம் காணவுள்ளார்.

இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை கடந்த சில மாதங்களாகவே கிருஷ்ணசாமி செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒட்டப்பிடாரம் தொகுதி அதிகம் பாதிக்கப்பட்டது.

டாக்டர் கிருஷ்ணசாமி இந்த பகுதியிலேயே தொடர்ந்து முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும், நிவாரண பணிகள் முறையாக நடைபெற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த பணிகளை மக்கள் பாராட்டினர்.

பெரும் சவால்

இருப்பினும் நீண்ட காலமாக தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. மேலும், இந்த தேர்தலில் பலமுனை போட்டி இருப்பதால் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை. எனவே, இம்முறை ஓட்டப்பிடாரம் தொகுதி கிருஷ்ணசாமிக்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x