

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.
ஈரோட்டில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது
ஈரோடு மாவட்டத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஆட்சியர் அலுவலகம் விரிவுபடுத்தப்பட்டது, குடிசை மாற்று வாரிய, அடுக்கு மாடி குடியிருப்புகள், மேம்பாலம், காலிங்கராயன் நினைவு மண்டபம், ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம், சாலை மேம்பாடு என பல திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்.
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக ஸ்டாலினும், 90 சதவீதமும் நிறைவேற்றி விட்டதாக உதயநிதியும், மாறி, மாறி பொய் பேசுகின்றனர். சொன்னதை ஏன் செய்யவில்லை என்று மக்கள் கேட்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் அதிமுக கோட்டை என பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இந்த தேர்தலில் வெற்றி அவசியம்.
திமுக முறைகேடு, தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறது. அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் நமக்கு மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கும், என்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், பி.சி.ராமசாமி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.