

காங்கிரஸில் அடுத்த தலைமுறை தலைவர்கள் உருவாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுல் காந்திக்கு ஃபேக்ஸ், இ-மெயில் அனுப்பி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் தற்போது எம்எல்ஏ-வாக இருப்பவர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலை வர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால், மற்ற கட்சிகளைப்போல காங்கிரஸில் இளைஞர்கள் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்றும், இந்த முறை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் இ-மெயில், ஃபேக்ஸ் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் சிலர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு முறையும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாச மில்லாமல் தங்களுக்கு சீட் வாங்கி கொடுத்த கோஷ்டி தலைவர்களுக்கு விசுவாசமாக செயல்படுகின்றனர். வேட்பாளர் தேர்வு நேர்மையாகவும், தலைவர்கள் தலையீடு இல்லாமலும் இருக்க வேண்டும்.
பெரும் பணக்காரர்களுக்கும், தலைவர்களுக்குமே தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால் காங்கிரஸில் அடுத்த தலைமுறை தலைவர்கள் உருவாக வாய்ப்பில்லை. ஒரு போதும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லாமல் போய்விடும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினால், வருங்காலத்தில் காங்கிரஸ் என்ற ஆலமரம் பெரும் வளர்ச்சி அடையும்வாய்ப்பு உள்ளது என ராகுலுக்கு அனுப்பிய இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.