

உட்கட்டமைப்பில் முடங்கிய பேரணாம்பட்டு நகரில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சுயேச்சைகளின் ஆதிக்கத்தால் சூடுபிடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் இருக்கும் சிறு நகரம் பேரணாம்பட்டு. வனப்பகுதி சூழ்ந்த நகரமான பேரணாம்பட்டின் வரலாறு சுமார் 15-ம் நூற்றாண்டு முதல் தொடர்வது தெரியவந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் முக்கிய வருவாய் நிர்வாக பகுதியாகவும் பேரணாம்பட்டு இருந்துள்ளது. 1996-ல் தேர்வு நிலை பேரூராட்சியாக தொடங்கி 2004-ல் மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஏறக்குறைய 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நகராட்சி 21 வார்டுகளுடன் 48,040 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் ஆண்கள் 23,521 பேர், பெண்கள் 24,501 பேர், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் அடங்குவர்.
வளமான நீர் வளம் நிறைந்த பகுதி என்பதால் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. வஜ்ஜிரம் தயாரிப்பு தொழிற்சாலைகள், பீடி தொழில் பிரதானமாகும். இஸ்லாமியர்கள்அதிகம் உள்ள நகரம். மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தாலும் இதுவரை நகரின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் வளர்ச்சி பெறாத நகரமாக இருப்பது அப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.
நகரில் உள்ள 21 வார்டுகளிலும் சீரமைக்கப்படாத சாலைகள், 20 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யாமல், தூர்ந்து போன கால்வாய்களை மீட்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
பல வார்டுகளில் சாலையின் உயரம் அதிகரித்தும் வீடுகள் தாழ்வானதும் மழைக்காலங்களில் கழிவுநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். ஆயக்கார வீதியில் கானாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலம் சேதமடைந்ததால் அதை மீண்டும் கட்ட வேண்டும்.
நகராட்சிக்கு என தனியாக குப்பைக்கிடங்கு அமைத்து நகரில் தேங்கும் குப்பையை முறையாக அகற்ற தரம் பிரிக்க வேண்டும். நகராட்சியில் பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு என பூங்கா உள்ளிட்ட பொது இடங்கள் எதுவும் இல்லை என்பது மக்களின் நீண்ட நாள் குறையாக இருக்கிறது. தற்போது பதவியேற்கும் நகராட்சி நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நகரில் குடிநீர் விநியோக பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லாமல் உள்ளது.
பிரதான குடிநீர் குழாய்களை மொத்தமாக அகற்றி மீண்டும் பதித்தால் தற்போதைய குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மிகவும் குறுகலான மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து காய்கறி விற்பனை நடைபெறுகிறது. இதற்கு மாற்றுத்தீர்வு காண வேண்டும்.
‘‘பேரணாம்பட்டு நகரை சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பிரதானமாக இருக்கிறது. இவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை ஆம்பூர் அல்லது குடியாத்தம் உழவர் சந்தை அல்லது மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். இதற்கு தீர்வாக பேரணாம்பட்டு நகரில் புதிதாக உழவர் சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்கிறார் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள அப்துல் ஹமீது.
அதேபோல், வி.கோட்டா தேசிய நெடுஞ்சாலை பணியால் மழைநீர் தேங்கி வெளியேறுவதில் சிக்கல் இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
பேரணாம்பட்டு நகராட்சி தேர்தல் களத்தில் போதிய வார்டுகள் ஒதுக்காததால் திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 21 வார்டுகளில் 97 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 37 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சுயேச்சையாக வெற்றிபெறும் நபரும் தலைவராகக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.