’எங்களை மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர்’ - மதுரையில் பாஜக வேட்பாளராக களம் காணும் திருநங்கை வேட்பாளர்

’எங்களை மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர்’ - மதுரையில் பாஜக வேட்பாளராக களம் காணும் திருநங்கை வேட்பாளர்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாநகராட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை தனது பிரச்சாரத்தால் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தங்களை மக்கள் நம்பத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் திருநங்கைகளும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் அதிமுக, பாஜக சார்பிலும், வேலூர் நகராட்சியில் திமுக சார்பிலும் திருநங்கை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். திருநங்கைகள் சுயேச்சையாகவும் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 850 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 94-வது வார்டு, திருநகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் சுஜாதா என்ற ஹர்சினி என்பவர் திருநங்கை ஆவார். இவர் வார்டு முழுவதும் பாஜகவினருடன் சென்று செய்து வரும் பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது குறித்து திருநங்கை சுஜாதா என்ற ஹர்சினி கூறியது: "நான் அதிமுகவில் 10 ஆண்டுகளாக மகளிரணி துணைச் செயலாளராக இருந்தேன். தற்போது பாஜகவில் சேர்ந்து வேட்பாளராகியுள்ளேன். மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் என்னை திரும்பிப் பார்க்க தொடங்கியுள்ளனர்.

செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அதிகமாக உள்ளது. இதனால் எனது வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, மதிமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. வாரிசு அரசியலை மக்கள் விரும்பவில்லை. திருநங்கைகளுக்கு வாரிசுகள் கிடையாது. இதனால் திருநங்கைகள் வாரிசு அரசியல் செய்யமாட்டார்கள். திருநங்கைகளை மக்கள் நம்ப தொடங்கியுள்ளனர்.

திருநகர் வார்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. என்னை எதிர்த்து பணம் பலம் கொண்டவர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் என்னை கண்டிப்பாகத் தேர்வு செய்வார்கள். நான் வெற்றிப் பெற்றால் வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in