

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் தனசேகரன், சுமார் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்புக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தனசேகரன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சாலிகிராமம் அருணாசலம் ரோட்டில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.திவாகரிடம் மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவில், தனக்கு சுமார் ரூ.14 கோடியே 50 லட்சம் மதிப்புக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் 5 வங்கிகளில் கையிருப்பாக ரூ.86 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனசேகரன் கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியிடம் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியவர். இப்போது அதே தொகுதியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் பார்த்தசாரதியை எதிர்த்து மீண்டும் களமிறங்குகிறார்.
இந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளார். இதனால் விருகம்பாக்கம், விஐபி தொகுதி அந்தஸ்து பெற்றுள்ளது.