Published : 14 Feb 2022 07:10 PM
Last Updated : 14 Feb 2022 07:10 PM

மதுரை மாநகராட்சியில் ‘டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை’க்கு திட்டம் - தடுக்குமா தேர்தல் ஆணையம்?

மதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் ‘டிஜிட்டல்’ முறையில் வாக்காளர்களுக்கு கடைசி நேரத்தில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. அதை தேர்தல் ஆணையம் கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து 100 வார்டுகளில் போட்டியிடுகின்றன. ஆனால், அதிமுக 100 வார்டுகளில் தனித்து போட்டியிடுகிறது. அமமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். இதில், திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே 80 வார்டுகளில் நேரடியாக போட்டி நிலவுகிறது. ஆளும்கட்சியாக இருப்பதால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் விட்ட வெற்றியை பெறுவதற்கு அதிமுக தீவிரமாக தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம், தேர்தல் வியூகத்தை தாண்டி வாக்காளர்களை கவனிக்கவும், இறுதிநேரத்தில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தற்போது முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு தினமும் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். விஐபி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதற்கு ரூ.100 முதல் ரூ.200 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வார்டுகளிலும் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக ஒரு பாகத்திற்கு ஒவ்வொரு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பாக பொறுப்பாளர், வேட்பாளர்கள் அப்பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது வாக்காளர்கள் மனதில் வெற்றி வேட்பாளர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க, அவரும் நேரத்தில் கூட்டத்தைக் கூட்டுவது, ஆரத்தி எடுக்க வைப்பது, கட்சியினருடன் சிறப்பு வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்வார்கள். இந்தப் பிரச்சாரத்திற்கு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் தினமும் கட்சியினர், ஆதரவாளர்கள் பிரச்சாரத்திற்கு உடன் செல்வதற்கு ஆண்களுக்கு ரூ.500, பெண்களுக்கு ரூ.300 வழங்கப்படுகிறது. இந்த தினசரி பேட்டாவுடன் காலை டீபன், மதியம் மற்றும் இரவு அசைவ உணவு பார்சலும் வழங்கப்படுகிறது.

இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வீடுகள் தோறும் வாக்குறுதிகளை குறிப்பிட்டு ஆதரவு கேட்கும் நோட்டீஸ் வேட்பாளர்கள் கொடுத்தாலும், முன்போல் அதிகளவு அச்சடிப்பதில்லை. தற்போது அனைவர் கைகளிலும் ஆன்ட்ராய்டு செல்போன் இருப்பதால் டிஜிட்டல் பிரச்சார யுக்தியையும் வேட்பாளர்கள் கடைபிடிக்கின்றனர். ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள தங்கள் ஆதரவாளர்கள், கட்சியினர் குடும்ப உறுப்பினர் செல்போன் ‘வாட்ஸ் அப்’புகளுக்கு ஆதரவு திரட்டி பேசும் வீடியோ மற்றும் வாக்குறுதிகளை குறிப்பிட்டு பிரச்சார வாசகங்களையும் அனுப்புகின்றனர்.

அதுபோல், வாக்குப்பதிவுக்கு முந்தைய இறுதி நாட்களில் பல வார்டுகளில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் பகுதியின் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவும் திட்டமிட்டிருப்பதாக, அக்கட்சிகளின் நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது வீடுகளுக்கு நேடியாக சென்று பணம் வழங்கினால் யாராவது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதால் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வேட்பாளர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இந்த திட்டத்தைத் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x