

மதுரை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சி 24-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வீடு வீடாக சென்று குப்பை சேகரித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் குட்டிகரணம் மட்டும்தான் அடிக்கவில்லை, மற்ற அனைத்து விதமான விநோத பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். விநோதங்களுக்கும், வித்தியாசத்திற்கும் பஞ்சமிருக்காத மதுரையில் வேட்பாளர்கள் தினமும் ஒரு வித்தியாசமான பிரச்சாரத்தை கையாளுகின்றனர். அவர்களில் மதுரை மாநகராட்சி 24-வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சங்கர பாண்டி, தேர்தல் பிரச்சார வாக்கு சேகரிப்பில் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்கள் வீட்டில் உள்ள குப்பைகளை சேகரித்து குப்பைத் தொட்டியில் கொட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
24 வது வார்டில் குப்பை கூளமாக இருப்பதை சுட்டிக்காட்டி வரும் காலத்தில் தூய்மையான பகுதியாக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து, தெருக்களில் உள்ள குப்பைகளையும் சுத்தம் செய்து, வாக்கு சேகரித்து வருகிறார். பகத்சிங் தெரு, இந்திரா நகர், ஹரி கிருஷ்ணா தெரு, பூந்தமல்லி நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் அப்பகுதியில் சாலைகள், தெருக்களில் கிடந்த குப்பைகளையும், வீடுகளுக்கு சென்றும் குப்பைகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேலும், பிரச்சாரம் குறித்து சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் கூறுகையில், தேர்தல் பிரச்சார கடைசி நாள் வரை குப்பை சேகரிக்கும் பணி நடைபெறும் என்றும், வெற்றி பெற்ற பின்னரும் குப்பை சேகரிக்கும் பணி தொடரும் எனவும் தெரிவித்தார்.