Published : 14 Feb 2022 01:26 PM
Last Updated : 14 Feb 2022 01:26 PM

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்பு | பின்புலத் தகவல்கள்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அதேபோல, அலஹாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின், அவர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் முனீஸ்வர் நாத் பண்டாரியை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பொறுப்பு நீதிபதியாக சந்தித்த வழக்குகள்...

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக, முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி வகித்தபோது, நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, கோயில்களில் வேட்டி அணிந்து வரக் கோரிய வழக்கில் நாடு முக்கியமா, மதம் முக்கியமா என கேள்வி எழுப்பியது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கியதை ரத்து செய்தது, நீலகிரி கோவிலில் பூசாரியாக உள்ள சிறுவனுக்கு தடையில்லாத கல்வி கிடைப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அங்கீகார தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது, புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது, விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது, கைதிகளுக்கு தாம்பத்ய உரிமைக்காக பரோல் வழங்க கூடாது என்பன போன்ற பல முக்கிய வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது பதவிப் பிரமாணம் செய்து வைக்க தலைமை நீதிபதியோ, மூத்த நீதிபதியோ இல்லாததால், தமிழக ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

யார் இந்த முனீஸ்வர் நாத் பண்டாரி?

நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, கடந்த 1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் ராஜஸ்தானில் பிறந்தவர். ராஜஸ்தான் அரசு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர், 2019-ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை பொறுப்பு நீதிபதியாக பதவி வகித்துள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x