

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி ஆளுநர் மாளிகையில் இன்று (திங்கள்கிழமை) காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிவந்த சஞ்சீப் பானர்ஜி, கடந்த ஆண்டு நவம்பரில் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக முழுப் பொறுப்பேற்றுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தலைமை நீதிபதிக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக அலுவலகம் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், 'அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஆளுநர் மாளிகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.