

சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். தன்னிடம் அசையா சொத்து எதுவும் இல்லை என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று ஒரே நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பொற்கொடியிடம் நேற்று காலை 11 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.
தனது பெயரில் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்து 383 எனவும், தனது மனைவி பெயரில் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 193 அசையும் சொத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் அசையா சொத்து எதுவும் இல்லை என்றும் மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மனுதாக்கலின்போது, திமுக சைதை பகுதி செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மு.மனோகரன், சுயேட்சைகள் விஷ்ணுராம், எஸ்.ரமேஷ் மற்றும் பாமக வேட்பாளர் சகாதேவனுக்கு மேலும் 2 பேர் மாற்று வேட்பாளாராக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.