Published : 14 Feb 2022 05:33 AM
Last Updated : 14 Feb 2022 05:33 AM
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன. ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இந்த ஆண்டு பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்விசி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது. அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண் ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்துஅனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்படும்.
இந்த மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 14-ம் தேதி (இன்று) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு ராக்கெட் ஏவுதல் அதிகார வாரியம் அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கியது. ஏற்கெனவே, திட்டமிட்டபடி இன்று காலை 5.59 மணிக்கு 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!