Published : 14 Feb 2022 07:27 AM
Last Updated : 14 Feb 2022 07:27 AM

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

சென்னை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவில் கூறியிருப்பதாவது:

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். புற்றுநோயால் குணமடைவோரின் விகிதம் மேற்கத்திய நாடுகளில் 80 சதவீதமாகவும், இந்தியாவில் 65 சதவீதமாகவும் உள்ளது, இதை இன்னும் குறைக்க வேண்டும்' என்பதே இந்தஆண்டின் முக்கிய நோக்கமாகும்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெண்கள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோயால்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல, ஆண்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்தான் அதிகம் இருக்கிறது.

ஒரு லட்சம் பேரை சோதனை செய்தால், 97 பேருக்கு ஏதாவது ஒரு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஒரு லட்சம் பேரில் 63 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்தாவிட்டால், தொடர்ந்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

சில சாதாரண அறிகுறிகளை பொதுமக்கள் புரிந்துகொண்டு, இந்த அறிகுறிகள் இருக்கும்போது ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவது நல்லது.

தொடர் இருமல், பசியின்மை, மூச்சு விடுவதில் சிரமம், உணவு விழுங்குவதில் சிரமம், மலம் கழிப்பதில் சிக்கல், ரத்தம் கலந்து மலம்செல்வது, அடிக்கடி சிறுநீர் வருதல், சிறுநீர் அவசரமாக வருதல், பாலின உறுப்புகளில் ரத்தம் கசிதல், உடல் எடை வெகுவாக குறைதல், அளவுக்கு அதிகமாக சேர்வு, நிறம் மாறுதல், கட்டிகள் அளவு பெரிதாவது, நீண்ட நாட்களாக உள்ள புண்கள் போன்றவை இருந்தால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் உடனடியாக பரிசோதனைகள் செய்து, சிகிச்சை பெற வேண்டும். அனைத்துப் பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். பரிசோதனையில் புற்றுநோய் உறுதியானால், மருந்து, அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கீழ் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.

புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, புகையிலை, மதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் 30 நிமிடம் சாதாரண உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x