Published : 14 Feb 2022 07:47 AM
Last Updated : 14 Feb 2022 07:47 AM

சென்னையில் 55 ஆண்டுகளாக முன்னேற்றமில்லை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 200 வேட்பாளர்களை மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்து, தேர்தல் வாக்குறுதிப் புத்தகத்தை வெளியிட்டார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி.படம்: க.பரத்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நேற்று நடைபெற்றது.

மண்டல இணைப் பொதுச் செயலர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் அன்புமணி பேசியதாவது:

திமுக, அதிமுகவால் சென்னையில் கடந்த 55 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சாக்காடை, குப்பை, கொசு, போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சினைகள் உள்ளன.

பல ஆண்டுகளுக்கு முன் கூவம்ஆற்று நீரைக் குடிக்கலாம். ஆனால்இன்று கூவம் ஆறு சாக்காடையாகிவிட்டது. இதற்கு திமுகவும், அதிமுகவும் ஒருவருக்கொருவர் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு முன்னேற்றம் என்றால் என்னவென்றே தெரியாது. தொலைநோக்குப் பார்வை கிடையாது. வசனம் மட்டுமே பேசும் இவர்களால் நல்லஆட்சியை கொடுக்க முடியாது.இவர்களுக்குத் தேவை பணம்மட்டும்தான். இவர்கள் சென்னையில் பல ஏரிகளை மூடிவிட்டார்கள். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்னுமாஇவர்களை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

சென்னையில் 8 ஆயிரம் நவீனப் பேருந்துகளை இலவசமாக இயக்கினால், போக்குவரத்து நெரிசல், விபத்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துவிடும். நீங்கள் விரும்பும் சென்னையை பாமகவால் கொடுக்க முடியும். மாசு, குப்பை, கொசு இல்லாத, பசுமையான சென்னையை உருவாக்குவோம்.

சாக்காடையாக மாறிய கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆற்றின் தண்ணீரைக் குடிக்கலாம். போக்குவரத்து நெரிசல் இருக்காது. தரமான சாலைகள் போடப்படும்.

சென்னைக்கு பெரிய நிர்வாகம் தேவை. திமுக, அதிமுக யார் ஆட்சியில் இருந்தாலும், சென்னை மேயருக்கு மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகளுக்கும் அதிகாரங்கள் வழங்குவதில்லை.

சென்னை மேயராக பாமகவைச் சேர்ந்தவர் வந்தால், அவருக்கு முழு அதிகாரமும் கொடுக்கப்படும். பாமக வித்தியாசமான கட்சி. பாமகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால், சென்னை மக்கள்வித்தியாசத்தை பார்ப்பார்கள்.

நீட் விஷயத்தில் திமுக, அதிமுகஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பொது விவாதம் நடத்தப் போகிறார்களாம். அந்த விவாதத்துக்கு நானும் வருகிறேன். நீட் தேர்வுக்கு முதல் காரணம் காங்கிரஸ், 2-வது திமுக, 3-வது பாஜக, 4-வது அதிமுக. நீட் தேர்வை அகற்றுவது எப்படி என சிந்தியுங்கள்.

டாஸ்மாக் கடைகளை மூடப்போவது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டும். அந்த விவாதத்துக்கு திமுக, அதிமுக தயாரா? நான் தயாராக இருக்கிறேன். திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தால், டாஸ்மாக் கடைகளை மூட மாட்டார்கள். ஆனால், பாமக ஆட்சியில் ஒரே கையெழுத்தில், ஒரே நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இவ்வாறு அன்புமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x