

கோதாவரி – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பாசன வசதிபெறும் விவசாய நிலங்களின் பரப்பு அதிகரிக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நாமக்கல்-முசிறி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ரயில் மூலம் கொண்டு செல்வதற்கு ‘ஒன் ஸ்டேஷன், ஒன் புராடக்ட்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கோதாவரி – பெண்ணாறு – காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பாசன வசதிபெறும் விவசாய நிலங்களின் பரப்பு அதிகரிக்கும். சில பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறையவும் வாய்ப்புகள் உள்ளன. நதிகள் இணைப்பு என்பது வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இதனை மாநில அரசுகளோடு இணைந்து செயல்படுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கரோனா காலம் பல துறைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியதால், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை (இசிஎல்ஜிஎஸ்) மத்திய அரசு விரிவுபடுத்தியது. தமிழகத்தில் கோவையில் மட்டும் சுமார் ரூ.1,300 கோடி கடன் பெற்று சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் தேசிய மகளிர் அணி செயலரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.