

புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவருக்கு ரூ.3 லட்சத்தை இளம் வழக்கறிஞர்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் நூதன உத்தரவுடன் திருப்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 510 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, டி.ராஜன் (39), எம்.சுயம்புலிங்கம் (51), ஆர்.முருகன் (54) ஆகியோரை கடந்த மாத இறுதியில் போலீஸார் கைது செய்தனர். பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் 3 பேரும் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன் வழங்கக் கோரி திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 பேரின் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இரு தினங்களுக்குமுன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் தனது உத்தரவில், கைது செய்யப்பட்ட மூவரும் பல்லடம் போலீஸார் முன்னிலையில் 30 நாட்களுக்கு காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். திருப்பியளிக்க இயலாத வைப்புத்தொகை அடிப்படையில் மூவரும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்தை வரைவோலையாக திருப்பூர் பார் அசோசியேஷன் பெயரில் அளிக்க வேண்டும். இத்தொகையை, இளம்வழக்கறிஞர்கள் சட்டத்துறை சார்ந்த நீதிபதி பதவிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும், சட்டப் புத்தகங்கள் வாங்கவும், நூலகத்துக்கான கணினி உள்ளிட்ட சாதனங்கள் வாங்கவும் பயன்படுத்திட வேண்டும். இதன் செலவின விவரங்களை நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறி, 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.