

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகியாக செயல்பட்டு வந்த சுரேஷ்குமார் இம்மாதம் 18-ம் தேதி சென்னை அம்பத்தூரில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கொல்லப் பட்டுள்ளனர். ஏராளமானோர் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை சம்பவங்கள் அனைத்தையும் யாரோ சிலர் திட்டமிட்டு செயல்படுத்துவதாக சந்தேகிக்கிறேன்.
ஆகவே, சுரேஷ்குமார் படுகொலை தொடர்பான புலன் விசாரணை நேர்மையாக நடைபெறவும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இனி கொல்லப்படாமல் தடுத்திடவும், சுரேஷ்குமார் படுகொலை தொடர்பான வழக்கின் புலன் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டனர்.
மனுதாரர் வெறும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். தனது கோரிக்கை தொடர்பான போதிய ஆவணங்களை அவர் தாக்கல் செய்யவில்லை.
மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணை நடத்தி வரும் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முறையாக புலன் விசாரணை நடத்தவில்லை என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.