

மாதந்தோறும் ரூ.1,000 அளிக்கப்படும் என அளித்த வாக்குறுதி குறித்து தாய்மார்கள் கேட்பார்கள் என்பதால் நேரில் வராமல் கணினி திரையை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் 28-வதுவார்டில் போட்டியிடும் பாஜகவேட்பாளரை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டபோது அண்ணாமலை பேசியதாவது:
பொங்கல் பரிசுத் தொகுப்பில்அளிக்கப்பட்ட வெல்லத்தை வாங்கமக்கள் பக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அப்போது அளிக்கப்பட்ட துணிப்பையை ரூ.60 அளித்து இந்த அரசு வாங்கியுள்ளது. ஒரு பைக்கு ரூ.50 கமிஷன் பெற்றுள்ளனர். கடந்த 8 மாதங்களில் 80 ஆண்டுகால கோபத்தை இந்த அரசு பெற்றுள்ளது. முதல்முறையாக இந்த தேர்தலில் தமிழக முதல்வர் நேரடியாக பிரச்சாரத்துக்கு வரவில்லை. சென்னையில் அமர்ந்துகொண்டு கணினி திரையை பார்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். வெளியே வந்தால் வாக்குறுதிப்படி மாதம் ரூ.1,000 எங்கே என தாய்மார்கள் கேட்பார்கள் என்பதால் பிரச்சாரத்துக்கு அவர் வரவில்லை. பணம் இருப்பவர்கள் டாக்டராகும் நிலையை நீட் தேர்வு மூலம் பாஜக அரசு மாற்றியுள்ளது, என்றார்.
நீட் தேர்வால் மாணவர்கள் பயன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, அண்ணாமலை நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக தமிழகத்தில் நீட் தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவிகள்பயன்பெற்றுள்ளனர். சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கிவைக்க, மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதால்தான், ஆளுநர்ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே, விவரம் தெரியாமல் ஸ்டாலின் பதிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஹிஜாப் விவகாரத்தில் அரசியல்அமைப்பு சட்டம் கூறியிருப்பதுபோல, கல்வி நிறுவனங்களில் அனைவரும் ஒரே மாதிரியானசீருடையைத்தான் அணிந்து வர வேண்டும். மத அடையாளங்களுடன் வருவதைத்தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரமே உதாரணம்’’ என்றார்.