

நாளை (சனிக்கிழமை) நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களும் வேட்புமனுக்கள் பெறப்படாது என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 33 (1)-ன்படி, பொது விடுமுறை நாளின்போது வேட்புமனுவினை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்கப்பட இயலாது.
1881 ஆம் ஆண்டு மாற்றுமுறை ஆவணச்சட்டப்பிரிவு 25-ன்படி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
அதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்காணும் சனிக்கிழமைகளில் வேட்புமனு பெறக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது.
1881 ஆம் ஆண்டு மாற்றுமுறை ஆவணச்சட்டத்தின்படி, 23.04.2016 (சனிக்கிழமை) மற்றும் 24.04.2016 (ஞாயிறுக்கிழமை) அன்று பொது விடுமுறையாகும். எனவே, 23.04.2016 (சனிக்கிழமை) மற்றும் 24.04.2016 (ஞாயிறுக்கிழமை) அன்று வேட்புமனு பெறப்படமாட்டாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.