Published : 14 Feb 2022 07:53 AM
Last Updated : 14 Feb 2022 07:53 AM
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மர்ம நபர்களால் திருடப்பட்ட 2 அணில்குரங்குகளை போலீஸார் மீட்டனர்.இத்திருட்டில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி 2 ஆண் அணில் குரங்குகள்சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மூலம் வண்டலூர் உயிரியல் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டன. அன்று முதல் அவை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த 8-ம் தேதி அதிகாலையில் வனச்சரகர் ரோந்துப் பணி மேற்கொண்டபோது 2 அணில் குரங்குகளும் திருடப்பட்டதையும் கண்டு பூங்கா நிர்வாகத்துக்குத் தெரிவித்தார். இதையடுத்து பூங்கா இயக்குநர் கருணபிரியா அறிவுறுத்தலின்பேரில் ஓட்டேரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
பூங்கா நிர்வாகம் சார்பில் சிசிடிவிகாட்சிகள், போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு 4 பேரைக் கைதுசெய்து அணில் குரங்குகளை மீட்டனர்.
இதுதொடர்பாக தாம்பரம் காவல்ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தவழக்கின் விசாரணையில், சிங்கப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த பூங்காவின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சத்தியவேல், கோவிந்தபுரத்தைச் சேர்ந்த ஜான் என்பவருடன் சேர்ந்துதிட்டம் தீட்டித் திருடியது தெரியவந்துள்ளது. அவர்களின் திட்டப்படி, கடந்த 7-ம் தேதி மாலை 3.30 மணிக்குஜான் பூங்காவுக்குள் பார்வையாளர் போன்று வந்து, அணில் குரங்கு அடைப்பிடத்தில் மறைவாகத் தங்கியுள்ளார்.
பார்வையாளர்கள் வெளியேறிய பின்னர், உடன் கொண்டு வந்தஆயுதத்தால் கூண்டின் கம்பிகளை உடைத்து 2 குரங்குகளையும் பையில் போட்டுக் கொண்டு, பூங்கா சுற்றுச் சுவரில் ஏறி குதித்துத் தப்பியுள்ளார். தொடர்ந்து சத்தியவேலுடன் இணைந்து காரணை புதுச்சேரியைச் சேர்ந்த சூர்யாவிடம் அணில் குரங்குகளைக் கொடுத்துள்ளனர். அவர் கொளத்தூரைச் சேர்ந்த வினோத்திடம் ரூ.4 லட்சத்துக்கு விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த குரங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டு, பூங்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT