

திமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்பட்டு மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுவிலக்கு குறித்து திமுக தரப்பில் பலமுறை தெளிவான விளக்கம் அளித்த போதிலும் மீண்டும் மீண்டும் திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். இதனால் தமிழக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்பட்டு மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மதுவிலக்கு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த பிறகு தமிழகத்தில் மதுவிலக்கு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது சட்டப்பேரவையில் பேசிய அதிமுக அமைச்சர், தமிழகத்தில் படிப்படியாகக் கூட மதுவிலக்கை கொண்டு வர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்றுதான் உள்ளது. பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று ஏன் கூறவில்லை. முதல் கையெழுத்து போடப்படும் ஏன் வாக்குறுதி அளிக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மக்களை ஏமாற்ற திரும்ப திரும்ப அவர் பொய்யான தகவல்களைக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும்போது, பூரண மதுவிலக்கு எனது கொள்கை. ஆனால், ஒரே கையெழுத்தில் அதனை செய்ய முடியாது என கூறியிருக்கிறார். இது உண்மையெனில் கடந்த 5 ஆண்டுகளில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்?
கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிறுவனத்தில் இருந்து அதிகமாக மதுவகைகள் வாங்கப்பட்டன?. அதனால் லாபமடைந்தது யார்? இதற்கு ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்.
கடந்த 2006 திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கருணாநிதி பொய் சொல்லி வருவதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருக்கிறார்.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 2 குடும்பங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டன.
கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை விவசாயிகளுக்கு எவ்வளவு நிலம் வழங்கப்பட்டது என்பதை முதல்வரால் கூற முடியுமா? ரூ. 1-க்கு 1 கிலோ அரிசி, 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட எண்ணற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.
இதையெல்லாம் ஜெயலலிதாவுக்கு பதில் சொல்வதற்காக நான் குறிப்பிடவில்லை. அவரது பொய் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்பதற்காக இதனை பட்டியலிட்டுள்ளேன். ஜெயலலிதாவின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்தால் திமுக ஆட்சி தானாக அமையும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.