

திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களமிறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் உடனடியாக விலகிக் கொள்ளாவிட்டால், இனி கட்சியில் எந்த பதவிக்கும் வர முடியாது என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி, மணப்பாறை நகராட்சி என பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, அந்த கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளே போட்டியாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவின் முன்னாள் கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதால் கட்சி வேட்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் மணப்பாறையில் திமுக கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு பேசியது:
இந்த முறை பல இடங்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக, போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இது, நம்மை நாமே அழிக்கும் நிலையை ஏற்படுத்திவிடும். போட்டி வேட்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து, உடனடியாக போட்டியிலிருந்து விலகிக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் கட்சியில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அவர்களால் கட்சியில் இனி எந்த பதவிக்கும் வர முடியாது.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கான கட்சி நிர்வாகிகள், போட்டி வேட்பாளர்களுடன் கலந்து பேசுங்கள். அவர்களுக்கு கூட்டுறவு சங்கத் தலைவர், பால்வளத் தலைவர் என பல்வேறு பதவிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கலாம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, “எதிர்க்கட்சியாக இருக்கும்போதே உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத இடங்களில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் நாம் ஆளுங்கட்சியாக உள்ளோம். எனவே இப்போதும் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், திமுக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், மணப்பாறை தொகுதி எம்எல்ஏ அப்துல்சமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.