Last Updated : 13 Feb, 2022 04:31 PM

 

Published : 13 Feb 2022 04:31 PM
Last Updated : 13 Feb 2022 04:31 PM

விற்பனைக்கு வந்த அரியவகை பறவை இறைச்சிகள் பறிமுதல்; வாங்குவோரும் குற்றவாளிகள்தான்: வனத்துறை எச்சரிக்கை 

புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அரியவகைப் பறவைகள்.

புதுச்சேரி: அரியவகை பறவைகளை வேட்டையாடுவது புதுச்சேரியில் தொடர்கிறது. வேட்டையாடி கள்ளத்தனமாக விற்பனைக்கு வைத்திருந்த பறவைகளின் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறவைகளைக் கொன்று விற்போரும், வாங்குவோரும் குற்றவாளிகள்தான் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை பகுதியில், பறவைகள் மற்றும் விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு சந்தை அமைத்து வெளிப்படையாகவே அதன் இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதுச்சேரி வில்லியனூர், கூடப்பாக்கம், பத்துக்கண்ணு பகுதிகளில் இவ்விற்பனை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகம். பொதுவாக, வன உயிரின பாதுகாப்பு சட்டபடி அட்டவணைக்குட்பட்ட விலங்குகளை கொல்வது சட்டப்படி குற்றம். ஆனால், இப்பகுதியில், ஊசுடு ஏரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வனத்துறை வழியாக செல்கிறது. சீசன் காலங்களில் 53 வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. எனவே தான், இந்த பகுதி கடந்த 2008ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அபூர்வ பறவைகள், விலங்குகளை அங்குள்ள சிலர் கொன்றும், பிடித்தும், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை தோறும் சந்தையில் விற்கின்றனர். இது சந்தை போன்று பறவை இறைச்சி விற்பனை நடக்கிறது.

ஊசுடு பறவைகள் சரணாலயத்தில் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்த போது இன்று பறவைகள் இறைச்சி விற்பனை நடப்பதாக விழுப்புரம் மாவட்ட வன அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதையடுத்து புதுச்சேரி, விழுப்புரம் வனத்துறையினர் கூட்டாக இச்சோதனையை நடத்தினர்.

வனத்துறையினர் கூறுகையில், "விற்பனை செய்தவர்கள் பறவை இறைச்சிகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 53 இறந்த பறவைகளின் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நத்தைகுத்தி நாரை 6, ஆள்காட்டி குருவி 1, சிறிய கொக்கு 2, உன்னி கொக்கு7, குருட்டு கொக்கு 11, வெள்ளை அறிவாள் மூக்கன், 13, ஜொலி ஜொலிக்கும் அரிவாள் மூக்கன் 5, லக்கா 3, ஆகியவை இறைச்சியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் 13 கிளிகள் உயிருடன் பிடிபட்டது.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், "கொல்லப்பட்ட பறவைகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1072ல் அட்டவணை செய்யப்பட்டுள்ளன. பறவையின் இறைச்சியை வாங்குவது தவறு. பறவைகள் வேட்டையாடப்படுவதால் கடும் பாதிப்பு மனிதர்களுக்குதான். பறவை இறைச்சியை விற்பதும், வாங்குவதும் தவறு. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972ன் கீழ், வேட்டையாடி கொன்றோருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குபவர்களும் குற்றவாளிகள்தான்.

வீட்டில் கிளிகள் வைத்திருப்பவர்கள் அதனை தாமாக முன்வந்து புதுவை வனம் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், தாமாக முன்வந்து ஒப்படைத்தால் நடவடிக்கை எடுக்கப்படாது. வனத்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் அவர்கள் தண்டனைக்கு பொறுப்பேற்க வேண்டும். பறவைகளை காக்க மக்கள் உதவ விரும்பினால், வனத்துறையின் 0413 - 2204808, 98435 73234 மற்றும் 94425 17288 எண்களில் தகவல் தரலாம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x