பிரேமலதா கொடியேற்றி இனிப்பு வழங்கினார்; தேமுதிக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக பாடுபடுவோம்: கட்சியின் கொடி நாளில் விஜயகாந்த் வாழ்த்து

பிரேமலதா கொடியேற்றி இனிப்பு வழங்கினார்; தேமுதிக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக பாடுபடுவோம்: கட்சியின் கொடி நாளில் விஜயகாந்த் வாழ்த்து
Updated on
1 min read

தேமுதிகவின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்று கட்சியின் கொடி நாளில் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட நாளான பிப்.12-ம் தேதி ஆண்டுதோறும் அக்கட்சி சார்பில் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கொடி நாள் நிகழ்ச்சியில், பொருளாளர் பிரேமலதா கட்சிக் கொடியை ஏற்றி வைத்து,தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையில், கொடி நாளை முன்னிட்டு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க ரசிகர் நற்பணி மன்றத்துக்காக புரட்சி தீபம் தாங்கிய கொடி கடந்த 2000-ம்ஆண்டு பிப்.12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் இந்த கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்தது ரசிகர்நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்தான்.

கட்சிக் கொடிக்கு என ஒரு நாளை அறிவித்து அதை கொண்டாடும் ஒரே கட்சி தேமுதிக மட்டுமே. எனவே, இந்த கொடி நாளை நாம்அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இடங்களை தவிர்த்து, ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், மாணவ, மாணவிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து, கொண்டாட வேண்டும்.

2005 செப்.14-ம் தேதி தேமுதிகஉதயமானபோது, நற்பணி மன்றக்கொடி, கட்சிக் கொடியாக மாற்றப்பட்டது. கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள நிறங்கள், கட்சியின் கொள்கை மற்றும் தமிழகத்தில் நிகழ வேண்டிய மாற்றத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.

நம் லட்சியத்தை அடைய நாம்அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் அனைவரும் கட்சியின் வெற்றிக்காக ஒற்றுமையாக பாடுபட வேண்டும். இந்த இனிய கொடி நாளில் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in