Published : 13 Feb 2022 08:35 AM
Last Updated : 13 Feb 2022 08:35 AM

தமிழகம் முழுவதும் நடந்த 22-ம் கட்ட மெகா முகாமில் 7.37 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த 22-வது கட்ட மெகா முகாமில் 7.37 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைகட்டுப்படுத்தும் வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசுகொள்முதல் செய்து வழங்குகிறது.

15-18 வயது மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலேயே கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு 9மாதங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

இதுதவிர, தமிழகம் முழுவதும் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை 21 மெகா முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 22-வது மெகாகரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில் மட்டும் 500 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்துமுதல் மற்றும் 2-ம் தவணைதடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். குறிப்பிட்ட சில முகாம்களில் மட்டும் 15-18 வயது சிறுவர்களுக்கும் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று நடந்த 22-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 7 லட்சத்து 36,708 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மையங்கள் இன்று செயல்படாது

தடுப்பூசி முகாம் பணியில்ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (ஞாயிறு) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்படும்.

வரும் 19-ம் தேதி சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளதால், அன்று மெகாகரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக 2,812 பேருக்கு தொற்று

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,679, பெண்கள் 1,133 என மொத்தம் 2,812 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 546,கோவையில் 523 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 33,966 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 33 லட்சத்து 48,419 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11,154 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 47,643 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,904 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 9,042 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 3,086 ஆகவும், சென்னையில் 590 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x