திமுக விதிமீறலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்

திமுக விதிமீறலை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக விதிமீறலில் ஈடுபடுவதை மாநில தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று தமிழக ஆளுநரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் திமுக மற்றும் மாநில தேர்தல் ஆணையம் தொடர்பாக நேற்று புகார் மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:

மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக இருந்துகொண்டு, திமுகவின் அராஜகங்கள், அத்துமீறல்களுக்கு துணைபோகிறது. பேரணி, ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், 9-ம் தேதி காலையில்திறந்த வேனில் ஊர்வலமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியபோது, ‘‘திமுகவின் ஓர் அங்கமாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் நடவடிக்கை தொடங்கியதில் இருந்தே தேர்தல் ஆணையம் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவிடாமல் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் கோவை, சேலம், ஈரோடு மாநகராட்சிகளில் முகாமிட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்யவிடக் கூடாது, அப்படியே வேட்புமனு தாக்கல் செய்தாலும் அவர்களை அச்சுறுத்தவேண்டும் என்பதற்காக அவர்கள் முகாமிட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள், அவர்களது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவை திரும்பப் பெற வைத்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் எதையும் கண்டும், காணாமல் இருக்கிறது. இதுபற்றி ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in