Published : 13 Feb 2022 11:22 AM
Last Updated : 13 Feb 2022 11:22 AM

3 பேருக்கு ஐ.எஸ் உடன் தொடர்பு? - தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு

தஞ்சாவூர் கீழவாசலில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனையிட்டபோது, அப்பகுதியில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள்.

தஞ்சாவூர்

ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் 3 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள தஞ்சாவூர் கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர்(49), முகமதுயாசின்(30), காவேரி நகரைச் சேர்ந்த அகமது(37) ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது.

அப்போது, 3 பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் 3 பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர்.இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் நேற்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x