

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. அதற்கு எதிராக 11 மருத்துவக் கல்லூரியை மோடி வழங்கியதால் தாங்க முடியாத ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யத் துடிக்கிறார் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
பழநி நகராட்சி, பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் பழநியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பாஜக 90 சதவீத இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் பொங்கல் தொகுப்புகளைக்கூட சரியாக வழங்க முடியாத இவர்கள் பிரதமரின் கரோனா தடுப்பூசியை கிண்டலடித்தது வெட்கக்கேடானது.
முதல்வர் ஸ்டாலினுக்கு தற்போது துணை பிரதமர் கனவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சமூக நீதி கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி, அதற்கு தன்னைத்தானே தலைவர் என அறிவித்துக் கொண்டு உள்ளார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 2015-ம் ஆண்டு டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அப்போது அதற்கு ஆதரவாக டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவர்தான், இன்று நீட் தேர்வுக்கு எதிராக பா.ஜ.க. அலுவலகம் மீதும் குண்டு வீசியவர். இந்த புள்ளிகளை இணைத்தாலே உண்மை புரியும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை முடிவு. அதற்கு எதிராக 11 மருத்துவக் கல்லூரியை மோடி வழங்கியதால் தாங்க முடியாத ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யத் துடிக்கிறார்.
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்று இப்போது பேசும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டப் பேரவையில் இருந்து சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநரிடம் சென்றபோது தெரியவில்லையா? இவ்வாறு அவர் பேசினார்.
இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கனகராஜ், நிர்வாகிகள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் நேற்று இரவு நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். கிழக்குமாவட்டத் தலைவர் தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.