Published : 26 Apr 2016 09:00 AM
Last Updated : 26 Apr 2016 09:00 AM

புதுச்சேரி கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்: காங்கிரஸ் எதிரி என்றால் என்.ஆர்.காங்கிரஸ் துரோகி - ரங்கசாமி மீது கடும் விமர்சனம்

காங்கிரஸ் எதிரி; என்.ஆர்.காங்கிரஸ் துரோகி என்று புதுச்சேரி பிரச்சாரத்தில் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார்.

புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 30 தொகுதி களுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியதாவது:

காங்கிரஸ் மற்றும் அதிலிருந்து பிரிந்து வந்த இயக்கம் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் இல்லை. இந்த கட்சிகளின் நிர்வாக திறமையின்மை காரணமாக புதுச்சேரியில் விவசாயமே வீழ்ந்துவிட்டது. தொழில் வளர்ச்சியும் இல்லை. இருந்த ஆலைகளுக்கும் மூடுவிழா நடந்துள்ளது.

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் குடும்பத்துக்கு சொந்தமான ஜேஆர் பவர் நிறுவனத்துக்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமையை மறைமுக முறையில் வழங்கி தங்கள் வளர்ச்சியை மேம்படுத்தியதுதான் மிச்சம். புதுச்சேரியின் வளர்ச்சி புஸ்வாணமாகிவிட்டது.

காங்கிரஸ், திமுக கூட்டணி என்றாலே இமாலய ஊழல் கூட்டணி என்றுதான் பொருள். நிலக்கரி ஊழல், 2 ஜி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என ஊழல் செய்தவர்கள். இன்று பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள். மக்களால் தண்டிக்கப்பட வேண்டிய கூட்டணிதான் இந்த கூட்டணி.

மத்திய இணை அமைச்சராக இருந்த நாராயணசாமியால் தொல்லைகள்தான் அதிகம். காங்கிரஸ் என்றாலே மக்கள் விரோத அரசு. அதனால்தான் நாடே காங்கிரஸை நிராகரித்தது.

தற்போது புதுச்சேரி மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் என்ஆர்.காங்கிரஸ் கட்சி காங்கிரஸை விட மோசமானது. அதிலிருந்து பிரிந்து வந்த கட்சி அப்படித் தான் இருக்கும். காங்கிரஸ் எதிரி என்றால் என்ஆர்.காங்கிரஸ் துரோகி. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவும், என்ஆர்.காங்கிரஸும் இணைந்து போட்டி யிட்டோம். தேர்தல் முடிந்து பெரும்பான்மை பெறாத சூழ்நிலையில், சுயேச்சை ஆதரவோடு ஆட்சி அமைத்தவர்தான் ரங்கசாமி. கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதைகுழியில் தள்ளிவிட்டுள்ளார் ரங்கசாமி.

இவரது ஆட்சியிலும் புதுச்சேரி மாநிலம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை. சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. இவரால் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது. நம்பிக்கை துரோகம் செய்வது ரங்கசாமிக்கு கைவந்த கலை. அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். என்ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்ட முடிவில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ரத்தினம் (எ) மனோகர், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தங்கராஜ், நெல்லித்தோப்பு தொகுதி திமுக பிரமுகர் அலெக்ஸாண்டர் ஆகியோர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

வெயிலில் இருவர் மயக்கம்

கடும் வெயிலின் தாக்கம் காரணமாகவும், கூட்ட நெரிசலில் சிக்கியும் புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயா என்பவரும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுச்சேரி பெண் காவலர் ரஜினியும் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்த கட்சித் தொண்டர்கள், அவர்களை பாதுகாப்பாக நிழலில் அமர வைத்தனர். இதனால் கூட்டத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x