

இன்று சர்வதேச வானொலி தினம்
வானொலிகளை கேட்கும் நேயர்கள் குறைந்துவருவதாக கருத்து நிலவி வருகிறது. அதற்கு நேர்மாறாக வானொலி நேயர்கள் அதிகரித்து வருவதாக, சமீபத்திய பிபிசி, அகில இந்திய வானொலி, ராய்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் ஆகியவற்றின் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
வானொலி பெட்டியில் கேட்பதில்லையே தவிர, செல்போன், இணையதளம் உள்ளிட்டவற்றின் மூலம் தொடர்ந்து வானொலி நிகழ்ச்சிகளை நேயர்கள் கேட்டு வருகின்றனர். வெளிநாட்டு அரசுகள் தங்களின் கலை, கலாச்சாரம், மொழி, எண்ணங்கள் ஆகியவை, வேற்று மொழியில் உள்ளவர்களையும் சென்றடைய வானொலியை இன்றளவும் ஒரு முக்கிய ஊடகமாக பயன்படுத்தி வருகின்றன. சீனத்தமிழ் வானொலியில் நமது ஊர் செய்திகளே இருக்காது. அவர்களுடைய சுற்றுலா தலங்கள், உணவு, கலாச்சாரம், அங்கு ஒலிம்பிக் நடைபெறுகிறது எனில் அந்த செய்திகள்தான் முக்கியமாக இடம்பெற்றிருக்கும்.
எல்லா உலக நாடுகளும் தங்களது வெளிநாட்டு வானொலி சேவையில் இதையே பின்பற்றுகின்றன. மேலும், பேரிடர் வரும்போதோ, மற்ற அவசியம் வரும்போதோ வானொலி கட்டமைப்புகளை மீண்டும் அமைத்து மக்களிடம் தகவல்களை கொண்டுசேர்க்க முடியாது. எனவேதான், வெளிநாடுகளில் வானொலியை வலுப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக இதழியல் துறை உதவி பேராசிரியரும், ரேடியோ ஆர்வலருமான தங்க.ஜெய்சக்திவேல் கூறியதாவது:
சிங்கப்பூர் வானொலி (ஒலி 96.8), மலேசிய வானொலி (மின்னல் எஃப்எம்) ஆகியவை 24 மணி நேரமும் தமிழில் ஒலிபரப்பு செய்து வருகின்றன. ஆஸ்திரேலிய வானொலி (எஸ்பிஎஸ் தமிழ்), இலங்கை, பாகிஸ்தான் வானொலிகளும் தமிழில் ஒலிபரப்பு செய்கின்றன. போப்பின் குரலை ஒலிப்பதற்காகவே வாடிகன் வானொலி உள்ளது.
வாடிகன் நகரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனையை தமிழகத்திலிருந்து நாம் நேரடியாக கேட்க முடியும். அமெரிக்காவில் தமிழில் ஒலிபரப்பப்பட்டு வந்த ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த ‘இசைமுரசு’ இணைய வானொலி, சூடான் நாட்டில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை தூதரை பேட்டி எடுப்பதாக அறிவிப்பு செய்தது. இதை அறிந்த சூடானில் பணிபுரிந்து வந்த தமிழர்கள், இணைய வானொலி நிலையத்தை தொடர்புகொண்டனர். அப்போது, ‘‘உள்நாட்டு கிளர்ச்சியில் சிக்கிக்கொண்டோம். இங்கிருந்து வெளியேவர முடியவில்லை. எனவே, தூதர் மூலம் காப்பாற்ற வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, இந்திய தூதரகம் மூலம் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உட்பட மொத்தம் 32 பேர் மீட்கப்பட்டு அண்மையில் இந்தியா வந்து சேர்ந்தனர். ஒரு வானொலி என்ன செய்யும் என்பதற்கு இது ஒருநல்ல உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.