Published : 13 Feb 2022 08:10 AM
Last Updated : 13 Feb 2022 08:10 AM

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் தமிழக எம்.பி வலியுறுத்தல்

சென்னை

சென்னை புறநகரில் முக்கியமான ரயில் நிலையங்களாக இருக்கும் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் தமிழக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் வலியுத்தியுள்ளார்.

சென்னைக்கு அடுத்த முக்கிய ரயில் நிலையமாக திருவள்ளூர் ரயில் நிலையம் இருக்கிறது. இங்கிருந்து தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இதேபோல், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையமும் முக்கியமானதாக இருக்கிறது. இங்கிருந்தும் பல ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணியின் காரணமாக சென்னைக்கு வந்து செல்கின்றனர். ஆனால், முக்கியமான விரைவு ரயில்கள் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. இதனால், விரைவு ரயில்களின் சேவையைப் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் தெற்கு ரயில்வே மூலம் ரயில்வே துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் தமிழக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் அருகே சுமார் 45 கிமீ தூரத்தில் இருக்கும் திருவள்ளூர், மாவட்ட தலைநகராக இருக்கிறது. இதேபோல், என் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி, கும்மிடிப்பூண்டியும் முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு, மேற்கு மாநிலங்களில் இருந்து வரும் விரைவு ரயில்கள் சென்னைக்கு உள்நுழையும் முக்கிய பகுதியாக இருக்கிறது.

சென்னையில் இருந்து அதேதூரம் கொண்ட செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன. எனவே, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி ரயில் நிலையங்களில் முக்கியமான விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருவள்ளூரில் பிருந்தாவன், திருவனந்தபுரம், காவேரி விரைவு ரயில்ளும், ஆவடியில் மங்களூர், சேரன், பெங்களூர் விரைவு ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் ஹவுரா மெயில், ஜிடி விரைவு ரயில்களும் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டுமென அமைச்சரிடம் வலியுத்தியுள்ளேன். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x