

திமுக அரசு சார்பில் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 90 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று திமுக பொருளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் மற்ற வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. இந்தக் கூட்டங்களுக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலர் க.சுந்தர் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார்.
அப்போது டி.ஆர்.பாலு பேசியதாவது: அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். 1959-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியில் மேயர் தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக தொண்டர்கள் தீவிரமாக கட்சிக்காக உழைத்தனர். அதேபோல் இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்து பெண் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும்.
கடந்த பத்து ஆண்டில் அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் வளர்ச்சி அடையவில்லை. திமுக ஆட்சி அமைந்தது. காஞ்சிபுரம் பெருநகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 ஆயிரம் கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட 505 உறுதிமொழிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றிய ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர்தான். தமிழக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று எடுத்துக் கூறி வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.
இந்த வேட்பாளர் அறிமுக பிரச்சாரக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், நகரச் செயலர் சன்பிராண்ட் கே. ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.ஏ. சேகரன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
திமுக தொண்டர் உயிரிழப்பு
பிள்ளையார்பாளையம், கிருஷ்ணன் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்று பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகி சந்தானம் என்பவருக்கு திடீர் மராடைப்பு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து இவரை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனாலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.