

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் என்று பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி தெரு, தசரதபுரம், அருணாச்சலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களுக்கு சேவை செய்யவேபாஜக உள்ளது. மற்ற கட்சியைப்போல குடும்பத்துக்கு சேவை செய்ய அல்ல. எங்களுக்கு வெற்றி,தோல்வி என்பது இரண்டாம்பட்சம்தான். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.
நீட் தேர்வை பாஜக கொண்டுவரவில்லை. ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வால் பிரச்சினை இல்லை. மருத்துவக் கல்லூரி வைத்துள்ளவர்கள்தான் நீட் தேர்வால் பாதிப்படைந்துள்ளனர். ஹிஜாப் விவகாரத்தைப் பொறுத்த வரை, பள்ளிகளில் ஜாதி, மதங்களை கொண்டு செல்வது தவறு. இவ்வாறு குஷ்பு கூறினார்.
பாஜக மாநகராட்சி தேர்தல்பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் கூறும்போது, "பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை யின் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது குறித்து மாநில அரசோ, உளவுத் துறையோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. உதயநிதிக்காக தேர்தல் விதிகள்மாற்றப்படுகின்றன. இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.