Published : 13 Feb 2022 08:18 AM
Last Updated : 13 Feb 2022 08:18 AM

சென்னையில் 5 ஆயிரம் மாநகராட்சிப் பணியாளர்கள் மூலம் வாக்குச்சாவடி சீட்டு விநியோக பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் 5 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் மூலம், வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்கும் பணி தொடங்கிஉள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பயிற்சி வகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:

வாக்குப்பதிவு தினத்தன்று, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மையத்தில் இருக்க வேண்டும். அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதா, அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டப்படுகிறதா, வேட்பாளர்களின் சந்தேகங்களைத் தீர்த்த பின்னர் வாக்குப்பதிவு தொடங்குகிறதா என்பதையெல்லாம் கண்காணிக்க வேண்டும்.

வாக்குப்பதிவு ரகசியம் காக்கும்வகையில் அந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிப்பதுடன், வாக்குப்பதிவின் போது மையங்களில் நடைபெறும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிக்கவும் வேண்டும்.

இரட்டைப் பதிவு

இரட்டைப் பதிவு மற்றும் வாக்களிக்க வராமல் இருக்கும்வாக்காளர்கள் குறித்த விவரங்களையும் கண்காணிக்க வேண்டும். நுண் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தை வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் பூர்த்தி செய்து, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

வாக்காளர்கள் தக்க ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கிறார்களா என்பதையும், சுயமாகவும்,சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்து, அறிக்கை தரவேண்டும்.

நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியின் பொறுப்பை உணர்ந்து, திறம்படச் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாநகராட்சியில் 5 ஆயிரம் பணியாளர்கள் மூலம் வீடுதோறும் சென்று, வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வழங்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும் 3 நாட்களில் இப்பணி நிறைவடையும்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை என 1,139 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 334 வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர் கள் நியமிக்கப்பட உள்ளனர். இதர வாக்குச்சாவடிகளில் `லைவ் வெப் ஸ்ட்ரீமிங்' முறையில் நேரடி கண்காணிப்புப் பணி நடைபெற உள்ளது" என்றார்.

இந்நிகழ்ச்சியில், தேர்தல்பார்வையாளர்கள் வி.தட்சிணாமூர்த்தி, டி.மணிகண்டன், மாநகராட்சி துணை ஆணையர்கள் விஷு மஹாஜன், டி.சினேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x