

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களுக்குச் சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டிடங்களின் வாடகைபல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என்று கூறி வெங்கட்ராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில்களுக்கு வரவேண்டிய வாடகை பாக்கித்தொகையை வசூலிக்க உத்தரவிட்டும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த ஆண்டு அக்டோபர் வரை தமிழக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய வாடகை பாக்கி ரூ.2,390 கோடியை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அந்த தொகையை முறையாக வசூலித்து இருந்தாலே 100 கோயில்களை நன்றாகப் பராமரித்து இருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
அப்போது காணொலி மூலமாக விசாரணைக்கு ஆஜராகியிருந்த அறநிலையத் துறை ஆணையர்,வாடகை நிலுவைத் தொகையை ஓராண்டுக்கு ரூ.540 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தினமும் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரைநிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம்,வாடகை வசூலில் காவல் துறைமூலமாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து கோயில்களின் சொத்துகளும் ஒன்றாகத்தொகுக்கப்பட்டு, வாடகைதாரர் களின் பட்டியலும், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, அவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.