

மதுரை: மதுரையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்த டீ போட்டுக் கொடுத்தும் சைக்கிளில் சென்றும் பிரச்சாரம் செய்தார் நடிகை காயத்ரி ரகுராம்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் செந்தில் 2 நாட்களாக பிரச்சாரம் செய்தார். நேற்று பாஜக கலை, கலாச்சார பிரிவு நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் மதுரையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 61-வது வார்டில் போட்டியிடும் லட்சுமியை ஆதரித்து எஸ்எஸ் காலனி பகுதியில் காய்த்ரி ரகுராம் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள டீ கடையில் டீ ஆற்றி கட்சியினருக்கு கொடுத்தார். பின்னர் வார்டின் பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்தார். மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், வேட்பாளர் லட்சுமி, முன்னாள் மாவட்ட தலைவர் சசிராமன் ஆகியோரும் சைக்கிள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
அப்போது காயத்ரி ரகுராம் பேசுகையில், “திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் நன்றாக சிந்தித்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.