Published : 13 Feb 2022 12:40 PM
Last Updated : 13 Feb 2022 12:40 PM
கோவில்பட்டியில் இருந்து பள்ளிநேரத்தில் இயக்கப்பட்ட அரசுபேருந்து திடீரென நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் குறுவட்டத்தில் உள்ள முத்துலாபுரம், தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், அச்சங்குளம், மேலக்கரந்தை, மாசார்பட்டி, அயன்ராசாபட்டி, வெம்பூர், அழகாபுரி கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.
மாணவ, மாணவிகளுக்காக கோவில்பட்டியில் அரசு பேருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, எட்டயபுரம், முத்துலாபுரம் வழியாக மேலக்கரந்தைக்கு 8.10 மணிக்கு வந்து, அங்கிருந்து பந்தல்குடி வழியாக அருப்புக்கோட்டை செல்லும். அதேபோல், மறுமார்க்கமாக மாலை 3.05 மணிக்கு அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு பந்தல்குடிக்கு 4.10 மணிக்கு வரும் பேருந்து, அங்கிருந்து மேலக்கரந்தை, எட்டயபுரம், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி செல்லும்.
இப் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி பந்தல்குடி பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில், இந்த பேருந்து கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் அல்லது பெற்றோர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அயன்வடமலாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் கூறும்போது, “ பந்தல்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி கோவில்பட்டி அரசு போக்குவரத்து க்கழக பணிமனையில் இருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து கடந்த 10 நாட்களாக இயக்கப்படவில்லை. தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. பேருந்து நிறுத்தப்பட்டு விட்டதால் மாணவ, மாணவிகள், பெற்றோர் சிரமம் அடைகின்றனர். எனவே, கோவில்பட்டி- அருப்புக்கோட்டை இடையே அரசு பேருந்தை தொடர்ந்து இயக்க வேண்டும்” என்றார் அவர்.
இதுகுறித்து கோவில்பட்டி பணிமனை அதிகாரிகள் கூறும் போது, “ அருப்புக்கோட்டைக்கு இன்று முதல் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT