

கலப்பு திருமணம் செய்து கொண்ட மகள், மருமகனை அரிவாளால் வெட்டிய மாமனார் உட்பட 5 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
ஜோலார்பேட்டையைச் சேர்ந் தவர் வினோத்குமார்(28). இவர், பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, அதே பகுதி யைச் சேர்ந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கருணாநிதி மகள் மணிமேகலையை விரும்பினார்.
இதையடுத்து, முறைப்படி கருணாநிதி வீட்டுக்குச் சென்று வினோத்குமார் பெண் கேட்டாராம். அப்போது இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், திருமணத்துக்கு கருணாநிதி ஒப்புக்கொள்ளவில் லையாம். இதையடுத்து, மணி மேகலையை வினோத்குமார் திரு மணம் செய்துகொண்டு பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றுவிட்டார்.
இதையறிந்த, கருணாநிதி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கலப்புத் திருமணம் செய்தவர்களைத் தேடி வந்தனர்.
சமீபத்தில், மணிமேகலைக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள் ளது. இதையடுத்து, குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்பதால், ஜோலார்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த ஒரு வாரத் துக்கு முன்பு மனைவி, குழந்தை களை வினோத்குமார் அழைத்து வந்தார்.
இதையறிந்த மணிமேகலையின் தந்தை கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் செல்போன் மூலம் மகளை தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர். பின்னர், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் வினோத்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் மாமனார் வீட் டுக்கு சென்றார். இவர்களைக் கண்ட கருணாநிதி ஆத்திரமடைந்து, ‘கலப்புத் திருமணம் செய்து தலை குனிவு ஏற்படுத்திவிட்டீர்களே’ எனக் கூறி மணிமேகலையை சரமாரியாக தாக்கினாராம். இதனை தடுக்க வந்த வினோத்குமாரையும் அடித்து விரட்டியுள்ளார். மேலும் கருணாநிதியின் குடும்பத்தினர் அரிவாளால் மகள், மருமகனை வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தம்கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து தம்பதியினரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் வினோத் குமார் கொடுத்த புகாரின்பேரில் டிக்கெட் பரிசோதகர் கருணாநிதி உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.