

தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சியின் முதல் தேர்தலில் தலைவர் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் யார்? என்ற ஆர்வம் தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருக்கடிமை எனப்படும் சோளிங்கர் நகரில் உள்ள யோக நரசிம்மர் கோயில் பிரசித்திப் பெற்றது. சோழர்கள், ஆற்காடு நவாப் மற்றும் திப்பு சுல்தானால் ஆளப்பட்ட பகுதியாக இருந்தது. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சோழசிம்மபுரம், சோழலிங்கபுரமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் சோளிங்கர் என்ற அழைக்கப்பட்ட நகரில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் சர் ஐர் கூட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் போர் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக கருதப் படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலமாக இருந்து வரும் சோளிங்கர் பேரூராட்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சோளிங்கர் நகராட்சி 27 வார்டு களுடன் சீரமைக்கப்பட்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. 29,531 வாக்காளர்கள் கொண்ட சோளிங்கர் நகராட்சியில் முதல் தேர்தலில் மொத்தம் 116 பேர் வேட்பாளர்களாக போட்டி யிடுகின்றனர்.
சோளிங்கர் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டியுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்கு சேகரிப்பில் திமுக முன்னணியில் இருந்தாலும் அதிமுக, அமமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர மாநில எல்லைக்கு மிக அருகில் உள்ள சோளிங்கர் நகரம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் முதல் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும் பெரியளவில் இருக்கிறது.
திருத்தணி-சோளிங்கர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், புறவழிச்சாலைக்கு பதிலாக திருத்தணி-சோளிங்கர் சாலையின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. நகரில் பொதுமக்களின் பொழுதுபோக்குமிடம் எதுவும் இல்லாத தால் எஸ்பிஐ வங்கிக்கு அருகில் உள்ள குளத்தையும், நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள நாரகுளத்தையும் தூர்வாரி பூங்காவுடன் நடைபயிற்சி பாதை அமைக்க வேண்டும் என்று கோரி யுள்ளனர்.
சோளிங்கரில் இருந்து அரக்கோணம், சித்தூர், நகரி, புத்தூர், பள்ளிப்பட்டு, திருத்தணி, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கான பேருந்து சேவை அதிகளவில் இருக்கிறது. ஆனால், நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் பொதுமக்களும் இயக்கப்படும் பேருந்துகளுக்கும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதால் நகரையொட்டிய பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
அதேபோல், சோளிங்கர் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வளாகத்தை புதிதாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி புதிய நகராட்சி தலைவர் செயல்படுவாரா? என்பதையும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.