Published : 12 Feb 2022 03:38 PM
Last Updated : 12 Feb 2022 03:38 PM
சென்னை: இடஒதுக்கீடு கொள்கைப்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எழும்பூரைச் சேர்ந்த, டாக்டர் அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர்களுக்கு பொதுப் பிரிவில் 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, மொத்தமுள்ள 200 வார்டுகளில் 36 வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். எனவே கூடுதலாக நான்கு வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வார்டு மறுவரையறை குறித்து 2018-ம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT