Published : 12 Feb 2022 12:34 PM
Last Updated : 12 Feb 2022 12:34 PM

தமிழகத்தில் பிப்.19-ல் தடுப்பூசி முகாம் நடைபெறாது: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பிப்.19-ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 22-வது கரோனா தடுப்பூசி முகாம் இன்று (12-02-2022) நடைபெறுகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியது, "தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் சற்றொப்ப 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 21 மெகா தடுப்பூசி முகாம்கள் 5 லட்சத்து 60 ஆயிரத்து 41 மையங்களில் நடத்தப்பட்டிருக்கிறது. இம்முகாம்களின் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 4 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை 9 கோடியே 75 லட்சத்து 7 ஆயிரத்து 326 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயதினைக் கடந்த 5 கோடியே 26 லட்சத்து 44 ஆயிரத்து 839 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இது சதவீத அடிப்படையில் 90.94 சதவீதமாகும். இதில் 2வது தவணை தடுப்பூசி 4 கோடியே 7 லட்சத்து 64 ஆயிரத்து 68 பேருக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இது சதவீத அடிப்படையில் 70 சதவீதமாகும். முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதமும், 2வது தவணை தடுப்பூசி 70 சதவீதமும் தமிழகத்தில் சிறப்பான வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கடந்த மாதம் 3-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 15 வயது முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடங்கி வைத்தார். தடுப்பூசி செலுத்த வேண்டிய இளஞ்சிறார்கள் என 33 லட்சத்து 46 ஆயிரம் பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 27 லட்சத்து 6 ஆயிரத்து 982 பேர். இது 80.90 சதவீதமாகும். 29 நாட்கள் கடந்து 3-ம் தேதிக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 8 லட்சத்து 50 ஆயிரத்து 360 ஆகும். இது 25.68 சதவீதமாகும்.

ஜனவரி 10-ஆம் தேதி பூஸ்டர் தடுப்பூசி, அதாவது முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்த 7 கோடியே 91 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவர்கள் கடந்த 2021 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதிக்கு முன்னர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நேற்று வரை கண்டறியப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 5 லட்சத்து 32 ஆயிரத்து 77 பேர். இது 67.26 சதவீதமாகும்.

ஊராட்சிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 792 ஆகும். தமிழகத்தில் உள்ள 121 நகராட்சிகளில் 24 நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. வழக்கமாக 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பணியாற்றிடும் பணியாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளதால் 35 ஆயிரம் இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் 1600 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் இன்று 500 இடங்களில் மட்டுமே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் 19- ஆம் தேதி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படமாட்டாது. நகர்ப்புறத் தேர்தல் காரணமாக அன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இங்கு பொதுமக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார் .

இந்த ஆய்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் , மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.நாராயணபாபு, பொதுமருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முதல்வர் மரு.தேரணிராஜன், இணை இயக்குநர் மரு.வினய் மற்றும் அரசு உயரலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x