Published : 01 Apr 2016 07:19 PM
Last Updated : 01 Apr 2016 07:19 PM

திருநெல்வேலி மாநகரில் தேர்தலை வரவேற்கத் தயாராகும் பிரச்சாரக் களங்கள்

இரட்டை நகரங்களான பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரக் களமாக தேர்ந்தெடுக்கும் இடங்கள் பல உண்டு. அவற்றில் பிரபலமானவை சில. தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களின்போதெல்லாம் களைகட்டும் இந்த பகுதிகள் இம்முறை கோடை வெயிலைவிடவும் சூடாக இருக்கப்போகும் தலைவர்களின் பிரச்சாரத்தைக் கேட்க தயாராக இருக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவும், தேர்தல் அறிக்கைகளை மக்களுக்கு விளக்கவும், எதிரணி அரசியல்வாதிகளின் செயல்பாடு களை விமர்சிக்கவும், தங்களுக்கு ஆதரவு கேட்டு மக்களிடம் பேசவும் தலைவர்களின் பிரச்சாரப் பயணத் திட்டங்களை முக்கிய கட்சிகள் தயாரித்து வருகின்றன.

களைகட்டும் இடங்கள்

ஒவ்வொரு நகரிலும் எங்கெங்கு பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்தி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பது என்றெல்லாம் பல்வேறு திட்டமிடுதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரம் களைகட்ட இடத்தேர்வு முக்கியம் என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டு வருகின்றனர்.

கட்சி தலைவர்கள் வேனில் அமர்ந்தோ அல்லது மேடையில் நின்றோ பிரச்சாரம் செய்யும்போது அவர்களது கண்ணுக்கெட்டும் தூரம் வரை கூட்டம் இருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் கண்ணும் கருத்துமாக உள்ளனர். அவ்வாறு கூட்டம் இருந்தால்தான் பிரச்சாரம் செய்ய வரும் தலைவர்கள் உற்சாகமடைவார்கள். தேர்தல் பிரச்சாரமும் களைகட்டும். தங்களு க்கும் கட்சித் தலைமையிடமிருந்து பாராட்டு கிடைக்கும் என உள்ளூர் நிர்வாகிகள் கருதுகின்றனர். இதற்காக சில ‘புத்திசாலி’ நிர்வாகிகள் சிறு கும்பல் கூடினாலே பெருங்கூட்டமாக காண்பிக்கும் வகையில் குறுகலான தெருக்களையும், இடங்களையும் தேர்வு செய்வதும் உண்டு.

நெல்லையில் பிரச்சாரக் களங்கள்

திருநெல்வேலி டவுனில் தேரடி திடல், வாகையடி முனை, சந்திப்பிள்ளையார் முக்கு, திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையம் முன்புறம், சிந்துபூந்துறை சாலை, தச்சநல்லூரில் சந்திமறித்தம்மன் கோயில் தெரு, பாளையங்கோட்டையில் ஜவஹர் திடல், ராமசாமி கோயில் திடல் உள்ளிட்டவற்றில் தொடர்ச்சியாக அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தற்போது இவற்றில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலிலும், டவுன் தேரடி திடலிலும் பிரச்சாரக் கூட்டங்கள் களைகட்டியுள்ளன.

இவ்வாறு பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் நிகழும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தை வேடிக்கை பார்க்கவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

அதே சமயம், அப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் படும்பாடு சொல்லிமாளாது.

மக்கள் கடும் அவதி

அரசியல் பிளக்ஸ் பேனர்கள், தலைவர்களை வரவேற்க அமைக்கப்படும் அலங்கார வளைவுகள், இரவில் பொதுக்கூட்டம் நடைபெற்றால் மேற்கொள்ளப்படும் மின் அலங்காரங்கள் ஆகியவற்றால் சாலையின் பல பகுதிகளில் கம்பங்கள் நடப்படுகின்றன. இது போக்குவரத்து நெரிசலையும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறையும் ஏற்படுத்துகிறது.

நடுரோட்டில் வெடிக்கப்படும் பட்டாசுகள், பிரச்சாரக் கூட்டங் களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி களால் சுற்றுவட்டார மக்களின் நிம்மதி குலைகிறது. முதியவர்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.

வர்த்தகர்களும் பாதிப்பு

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் திடல்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒருசில கடைகளில் வியாபாரம் சூடுபிடிக் கும் என்பது உண்மை. அதேநேரத்தில் ஒலிபெருக்கி சத்தம், பிரச்சாரப் பகுதியில் காட்டப்படும் போக்கு வரத்து கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால் பல கடைகளில் வியாபாரம் படுத்துவிடுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கூட்டம் நடைபெறும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமோ என்ற அச்சத்தில் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வருவதைத் தவிர்க்கின்றனர். போக்குவரத்தும் தடைபடும் என்பதால் பலர் இந்த திடல்கள் அமைந்துள்ள இடங்களுக்கு தங்கள் வாகனங்களில் செல்வதைத் தவிர்த்துவிடுகிறார்கள்.

ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் கட்சிகளின் பிரச்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அதை மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடத்த வேண்டும். பிரச்சாரம் நடைபெறும் இடங்களில் அத்துமீறல்களுக்கு தேர்தல் அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தால் தேர்தல் களங்கள் களைகட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x